நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் நிலையில் மத்தியில் ஆளும் பாஜக, தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. இதன் ஒரு கட்டமாக டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பாஜக இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று காலை கூடியது. பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் பங்கேற்று உள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், எச. ராஜா, வானதி சீனிவாசன், அண்ணாமலை உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றுள்ளனர். இன்று பிற்பகல் 3 மணிக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உரையாற்றுகிறார். நாளை பிரதமர் மோடியின் உரையுடன் கவுன்சில் மாநாடு நிறைவடைய உள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர்கள், கட்சியின் பல்வேறு அணித் தலைவர்கள், தேசிய செயற்குழு, தேசிய கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மக்களவை பொறுப்பாளர்கள், செய்தி தொடர்பாளர்கள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் என மொத்தம் 11,000 பேர் இந்த இரண்டு நாள் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கவுன்சில் கூட்டத்தில் ராமர் கோவில் கட்டிய சாதனை , தேர்தல் பணி உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
தேசிய கவுன்சில் கூட்டத்துக்கு முன்னதாக, டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பாஜக தேசிய மாநாட்டின் கண்காட்சியை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தொடங்கி வைத்தார். அதனை பிரதமர் மோடியும் பார்வையிட்டார்.