Skip to content
Home » விண்கல் மாதிரியுடன் நாசா விண்கலம் 24ம் தேதி தரையிறங்குகிறது

விண்கல் மாதிரியுடன் நாசா விண்கலம் 24ம் தேதி தரையிறங்குகிறது

  • by Senthil

விண்வெளி ஆய்வில் தீவிரம் காட்டி வரும் நாசா, பூமிக்கு அருகில் உள்ள பென்னு என்ற விண்கல்லை ஆய்வு செய்வதற்காக ஓசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலத்தை கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி செலுத்தியது.  இத்திட்டம், சிறுகோள்களை ஆய்வு செய்வது மற்றும் அவற்றின் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவருவதற்கான நாசாவின் முக்கியமான செயல்திட்டம் ஆகும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பென்னு விண்கல்லில் இருந்து குறைந்தது 60 கிராம் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதாகும். இதன் மூலம் சூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும், அதன் ஆரம்பக் கட்டக் கோளுருவாக்கம், புவியில் உயிர்களின் தோற்றத்தை நிர்ணயிக்கும் கரிமச் சேர்மங்களின் மூலம் ஆகியவற்றை ஆராய உள்ளனர்.

ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலம், 2 ஆண்டுகள், 2 கோடி கி.மீ. தூரம் பயணித்து, 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி பென்னு என்ற விண்கல்லை நெருங்கியது. பென்னுவில் இருந்து 19 கிமீ தூரத்தை அணுகியது. அந்த தொலைவில் இருந்தபடியே தொடர்ந்து பல மாதங்கள் பென்னுவை சூழ்ந்து ஆய்வு செய்து அங்கு மாதிரியை சேகரிக்கும் இடத்தை தேர்வு செய்தது. அதன்பின், தரையிறங்காமல் மிக நெருக்கமாக சென்று இயந்திர கையை நீட்டி விண்கல்லில் உள்ள மாதிரியை சேகரித்துள்ளது.

2020ம் ஆண்டு தனது இறுதிக்கட்ட பணியை நிறைவு செய்த ஓசிரிஸ் ரெக்ஸ், அந்த விண்கல்லின் மேற்பரப்பில் சேகரிக்கப்பட்ட மாதிரியுடன் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. விண்கலம் வரும் 24ம் தேதி, தான் சேகரித்த மாதிரியுடன் பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமியை விண்கலம் நெருங்கியதும் அதிலிருந்து விண்கல் மாதிரி வைக்கப்பட்ட கலன் (கேப்ஸ்யூல்) மட்டும் தனியாக பிரிந்து வரும். உட்டா மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள பாலைவனத்தில் பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் இந்த கேப்ஸ்யூலை விண்கலம் பிரித்துவிடும். கேப்ஸ்யூல் பாராசூட் மூலம் விழுந்ததும் அதனை பாதுகாப்பாக ஆய்வுக்கூடத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கான ஒத்திகையை நாசா விஞ்ஞானிகள் சமீபத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டனர். இந்த பென்னு விண்கல் எதிர்காலத்தில் பூமியை தாக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!