அமைச்சர் கே.என். நேருவின் தம்பியும் தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு திருச்சி தில்லைநகரில் நடைபயிற்சி சென்றபோது கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் இதுவரை நடத்திய விசாரணையில் எந்த துப்பும் துலங்கவில்லை. இந்த நிலையில் கொலை குற்றவாளிகளை கண்டறிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு தமிழ்நாடு முழுவதும் உள்ள 13 ரவுடிகளின் பட்டியலை தயாரித்து அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தது. இதில் ஒருவர் மட்டும் இந்த சோதனைக்கு ஒப்புக்கொள்ள மறுத்தார். மற்ற 12 ரவுடிகளிடமும் சோதனை நடத்த திருச்சி கோர்ட் அனுமதி வழங்கியது.
அதனைத்தொடர்ந்து மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், சத்யராஜ் ஆகிய 4 பேரிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. டில்லியில் இருந்து வந்த தடயவியல் நிபுணர் மோசஸ் தலைமையிலான நிபுணர்கள் 2 பேர் இந்த சோதனையை நடத்தினர். அப்போது சிறப்பு புலனாய்வுக்குழு எஸ்.பி. உள்பட போலீஸ் அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.இன்று காலை சென்னை மைலாப்பூரில் உள்ள தடய அறிவியல் கூடத்தில் இந்த சோதனை தொடங்கியது. இன்று மாலை வரை இந்த சோதனை நடைபெறலாம் என தெரிகிறது. மற்றவர்களிடம் அடுத்தடுத்த நாட்களில் சோதனை நடைபெறும்.