30 அடி உயரத்திலிருந்து விழுந்து தனியார் நிறுவன ஊழியர் சாவு…
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார், நெ.1 டோல்கேடில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் திருமலை (46).தில்லைநகரில் உள்ள கணினி பழுதுநீக்கும் நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். நேற்று அந்நிறுவனத்தில் 30 அடி உயரத்தில் அமர்ந்து ஜன்னலை சுத்தம் செய்துகொண்டிருந்தார், அப்போது எதிர்பாராத விதமாக கால் தடுக்கி 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி விமலா லட்சுமி (46) அளித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது.
திருச்சி, காந்தி மார்க்கெட், வடக்கு தாராநல்லுார், கழிவுநீர் வடிகால் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சந்தேகிக்கும் வகையில் நின்றவரிடம் விசாரித்தனர். அவர் வடக்கு தாராநல்லுார், காமராஜ் நகரைச் சேர்ந்த தேவா (31) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.25 ஆயிரம் கஞ்சா, செல்போன் மற்றும் கஞ்சா விற்ற ரூ. 1450 பணத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் தென்னுார், ஒத்தமினார் பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்ற அதேபகுதியைச் சேர்ந்த பரகத்துல்லா (35) என்ற வாலிபரை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர்.
போதை மாத்திரை வைத்திருந்த 3 வாலிபர்கள் அதிரடியாக கைது
திருச்சி, பொன்மலை போலீசார் முன்னாள் ராணுவ பணியாளர் காலனி சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் போலீசாரிடமிருந்து தப்ப முயன்றனர். அவர்களை பிடித்து நடத்திய விசாரணையில் அரசால் தடைவிதிக்கப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் லால்குடி, எசனக்கோரை, வடக்கு தெருவைச் சேர்ந்த புவனேஷ் (32) மற்றும் செந்தண்ணீர்புரம், 4-வது தெருவைச் சேர்ந்த பிரபாகரன் (35) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து ரூ.27 ஆயிரத்து 700 மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போதை மாத்திரை வைத்திருந்த 3 பேர் கைது
திருச்சி, சங்கிலியாண்டபுரம், மணல்வாரித்துறை பகுதியில் தனியார் நிறுவன கொரியரில் போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக நேற்று பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருச்சி, எடத்தெருவைச் சேர்ந்த சச்சின் (21), வரகனேரி, பென்ஷனர் தெருவைச் சேர்ந்த உதய சங்கர் (21) மற்றும் கரூர் மாவட்டம், காந்தி கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் (18) என்பதும், கொரியரில் போதை மாத்திரைகள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இந்த 3 பேரையும் பாலக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அதோடு அவர்களுடைய கூட்டாளியான அபிஷேக் என்பவரை தேடிவருகின்றனர்.