Skip to content
Home » சென்னை கோவில் தீர்த்தவாரியில் 5 இளைஞர்கள் பலியானது எப்படி?

சென்னை கோவில் தீர்த்தவாரியில் 5 இளைஞர்கள் பலியானது எப்படி?

சென்னையை அடுத்த நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியில் பழமையான தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.  விழாவையொட்டி நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த சம்பவத்தில் 5 பேர் குளத்தில் பலியாகினர். சம்பவம் நடந்தது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது.. தர்மலிகேஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் மூவரசம்பட்டு பகுதியில் உள்ள குளத்தில் தீர்த்தவாரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக அர்ச்சகர்கள், தன்னார்வலர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர், காலை 9 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவர் சாமி சிலையை பல்லக்கில் வைத்துக்கொண்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக மூவரசம்பட்டு குளத்துக்கு கொண்டு சென்றனர்.  சுமார் 20 அடி ஆழம் கொண்ட அந்த குளத்தில் அதிக அளவில் சேறும்சகதியும் நிறைந்து இருந்தது. எனவே தன்னார்வலர்கள் 25 பேர் முதலில் குளத்தில் இறங்கி, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்த பாதுகாப்பு வளையமாக ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி சங்கிலிபோல் நின்று கொண்டனர். அதைத்தொடர்ந்து அர்ச்சகர்கள் 5 பேர் பல்லக்கில் இருந்த சாமி சிலையை ஒருவர் கையில் தூக்கிக்கொள்ள, மற்றவர்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி ஒன்றாக குளத்தில் இறங்கினர். பின்னர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அர்ச்சகர்கள் கையில் இருந்த உற்சவர் சாமி சிலையுடன் குளத்தில் நீராடினர். இவ்வாறு 3 முறை அர்ச்சகர்கள் சாமி சிலையுடன் குளத்தில் மூழ்கி எழுந்தனர்.  3-வது முறையாக சாமி சிலையுடன் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கியபோது அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக சங்கிலி போல் கைகோர்த்து நின்ற தன்னார்வலர்களில் ஒருவர், திடீரென நிலைதடுமாறி குளத்தில் இருந்த சேற்றில் கால் வைத்து விட்டார். இதில் சிக்கி அவர் நீரில் மூழ்கி தத்தளித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தன்னார்வலர்கள் ஒருவர் பின் ஒருவராக அவரை காப்பாற்ற முயன்றனர். கண்இமைக்கும் நேரத்தில் அவர்களும் அடுத்தடுத்து சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி பலியானார்கள். அவர்களில் யாருக்கும் நீச்சல் தெரியாததாலும், சேற்றில் சிக்கியதாலும் இந்த விபரீதம் நிகழ்ந்து விட்டது என்கின்றனர். பலியான 5 பேரின் பெயர் விவரம் வருமாறு:- 1. ராகவ் ( 19) புழுதிவாக்கம் முத்து முகமது தெருவைச் சேர்ந்தவர். 2.வனேஷ் (19) நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் சி.ஏ. படித்து வந்தனர். 3. ராகவன் (22) புழுதிவாக்கம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர். இவர், சி.ஏ.படித்து விட்டு பயிற்சியில் இருந்தார். 4.சூர்யா (22) நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. இவர், தனியார் தொலைக்காட்சியில் மேக்கப் கலைஞர். 5. யோகேஸ்வரன் (23) மடிப்பாக்கம் பாலையா கார்டன் பகுதியை சேர்ந்தவர். இவர், ஒரகடத்தில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர்கள் 5 பேரும் நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தன்னார்வலராக இருந்து கோவில் பணிகள் செய்வது வழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *