அரியலூர் மாவட்ட மதிமுக செயலாளர் இராமநாதன் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான துரை. வைகோ, அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களின் கருத்தறிய நடிகர் விஜய் சென்றிருப்பது தவறு கிடையாது. தமிழக அரசும் இதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கி உள்ளது. பிரபலமான நடிகர் என்பதால் சட்டம் ஒழுங்கு கெடக்கூடாது என்பதால் சில வரைமுறைகளை வகுத்து அவர் அப்பகுதி மக்களை சந்திக்க அனுமதி வழங்கி உள்ளது. அப்பகுதி கிராம மக்களும் தங்களது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு அரசியல் இயக்கம் நடத்துபவர், பொதுமக்களை சந்தித்து கருத்துக்களை கேட்பது, பின்னர் அதை செய்தியாளர்கள் மூலம் வெளிப்படுத்துவது என்பது தவறு ஏதும் கிடையாது என்று கூறினார்.
மேலும் பெரியார் குறித்த கருத்துக்களை சீமான் கூறி வருவது குறித்து கருத்து தெரிவித்த துரை வைகோ, பெரியார் குறித்து ஆர் எஸ் எஸ் அமைப்பு பாரதிய ஜனதாவும் கருத்து கூறுவது என்பது வேறு. திராவிட கொள்கைகள் மற்றும் தமிழ் தேசியம் பேசுபவர்கள் பெரியார் குறித்து தவறாக கருத்து கூறக்கூடாது. ஏனென்றால் பெண்களின் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக பெண்களின் கல்வி, வாழ்க்கை, பொருளாதார முன்னேற்றத்திற்காக பெரிதும் பாடுபட்டதால் தான், ஈ.வே. ராமசாமி என்ற பெயர், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதால் பெரியார் என்று மாற்றப்பட்டது. பெண்கள் முன்னேற்றத்திற்காக முதல் முதலில் குரல் கொடுத்தவர் பெரியார். எனவே தமிழ் தேசியம் பேசுபவர்கள் பெரியாரை கொச்சைப்படுத்த முயல்வது தவறானது. சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் பெரியார் பற்றி கொச்சையாக பேசுவது வேண்டாம் என்பது எனது அன்பான வேண்டுகோள் என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை. வைகோ கூறியுள்ளார்.