கேரளாவை சேர்ந்த தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்த சூழலில் பெற்றோர் பிரிந்து விட்டனர். அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழை மருத்துவமனையில் இருந்து அவர்கள் பெற முயன்றனர். அப்போது குழந்தைக்கான பெயர் விபரத்தை கேட்டனர். ஆனால் குழந்தைக்கு தந்தை ஒரு பெயரையும், தாயார் ஒரு பெயரையும் கூறினர். அதாவது குழந்தைக்கு ‛புண்யா நாயர்’ என பெயர் வைக்க தாய் விரும்பினார். ஆனால் குழந்தையின் தந்தையோ ‛பத்மா நாயர்’ என பெயரிட விரும்பினார். இதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் விட்டு கொடுக்கவில்லை.இந்நிலையில் தான் தற்போது அந்த குழந்தைக்கு 4 வயது ஆகிறது. குழந்தையை அவரது தாயார் கவனித்து வருகிறார்.
குழந்தையை பள்ளியில் சேர்க்க அவர் விரும்பினார். மேலும் குழந்தையின் பெயரை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய அவர் நினைத்தார். இதற்காக பதிவாளரை அவர் அணுகி குழந்தையின் பெயரை ‛புண்யா நாயர்’ என பதிவிடும்படி கூறினார். அப்போது குழந்தையின் தந்தை வர வேண்டும் என பதிவாளர் கூறினார். ஆனால் அந்த தம்பதி பிரிந்து வசித்து வருவதால் குழந்தையோடு அந்த பெண் வீடு திரும்பினார். தந்தையோ பத்மா நாயர் என்ற பெயரை சூட்டும்படி கூறினார்.
இதற்கிடையே குழந்தைக்கு பெயர் சூட்டும் விஷயம் தொடர்பாக குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார். ஆனால் தீர்வு என்பது ஏற்படவில்லை. இத்தகைய சூழலில் தான் அந்த பெண் தனது மகளுக்கு பெயர் வைக்கும் விஷயம் தொடர்பாக கேரளா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 4 ஆண்டுகளாக குழந்தைக்கு பெயர் வைக்காமல் இருப்பதை நீதிபதி கண்டித்தார். உங்கள் இருவரின் சண்டைக்கு நடுவே குழந்தைக்கு பெயர் வைத்து பதிவு செய்யாமல் இருப்பது அவளது கல்வி மற்றும் அரசு நலத்திட்டங்கள் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டி கண்டித்தார்.
அதோடு இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அவர் கூறினார். அதன்படி நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பெயர் சூட்டினார். அதன்படி குழந்தையின் தாய் தேர்வு செய்த ‛புண்யா நாயர்’ என்பதற்கு இடையே தந்தையின் பெயரை சேர்த்து சூட்டினார். அதாவது குழந்தைக்கு புண்யா பி(பத்மா) நாயர் என சூட்டினார். இந்த வேளையில், குழந்தை தற்போது தாயுடன் வளர்ந்து வருகிறது. இருப்பினும் தந்தையும் முக்கியம் என்பதால் இந்த பெயரை சூட்டியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.