Skip to content

ஜார்கண்ட் மருத்துவ கல்லூரியில் , நாமக்கல் மாணவர் கொலை, கல்லூரியில் பயங்கரம்

  • by Authour

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரை சேர்ந்தவர் மதியழகன் . இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதிக்கு மதன்குமார் (29)என்ற மகனும், ஜனனிஸ்ரீ (24) என்ற மகளும் இருந்தனர்.  மதியழகன், தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

எம்.பி.பி.எஸ். படித்துள்ள டாக்டர் மதன்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எம்.பி.பி.எஸ். படித்த இவர் 2 ஆண்டுகள் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றினார். தொடர்ந்து நீட் தேர்வு எழுதிய அவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்லூரியில் தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுவியல் மேற்படிப்பில் சேர்ந்தார்.

தற்போது 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் உள்ள விடுதியில் மதன்குமார் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் திடீரென மதன்குமார் மாயமானார். சக மாணவர்கள் அவரை பல இடங்களில்

தேடினர். அப்போது விடுதியின் பின்புறம் மதன்குமார் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்களும் கல்லூரி நிர்வாகத்தினரும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணையில், விடுதியின் மாடியில் வைத்து டாக்டர் மதன்குமாரை கொலை செய்த மர்ம நபர்கள் அவரது உடலை தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர் பாதி எரிந்த நிலையில் உடலை தூக்கி கீழே போட்டதில் அந்த உடல் விடுதியின் பின்புறத்தில் விழுந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் கொலை நடந்த விடுதியை சோதனை செய்த போலீசார் அங்கிருந்த மதன்குமார் செல்போன் ஒன்றையும் கைப்பற்றினர்.

மேலும் அங்கு பதிவாகி இருந்த சில கை ரேகைகளையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். விடுதியின் மேற்கூரையில் பதிவாகி இருந்த கால் தடங்களையும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.  இது தவிர சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் விடுதியில் இருந்த மாணவர்களிடமும் விசாரணை நடத்தி உள்ளனர். கடந்த 31-ந் தேதி இரவு மதன்குமார் அவரது செல்போனில் இருந்து கடைசியாக பேசி உள்ளார். அவர் யாரிடம் பேசி உள்ளார் என்பது குறித்தும், என்ன பேசினார் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே டாக்டர் மதன்குமார் இறப்புக்கு உண்மையான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்கள் ஏதாவது போட்டியில் கொலை செய்திருக்கலாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதன்பேரிலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையே டாக்டர் மதன்குமார் இறந்த தகவல் நாமக்கல் அருகே புத்தூரில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அதனை கேட்டு கதறி துடித்த அவர்கள் உடனடியாக கோவைக்கு சென்று அங்கிருந்து விமானத்தில் டில்லி  வழியாக ஜார்கண்ட் சென்றனர்.   பெற்றோர் அளிக்கும் புகார்களின் அடிப்படையிலும் போலீசார் விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறார்கள். மேலும் பெற்றோரிடம் ஒப்புதல் பெற்றதும் மதன்குமார் உடல் பிரேத பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து மதன்குமார் உடலை நாமக்கல் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகளும், மதன்குமாரின் பெற்றோர்களும் இறங்கி உள்ளனர். இதையொட்டி அவரது சொந்த ஊரில் உறவினர்கள் திரண்டு உள்ளனர். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!