Skip to content

நாமக்கல் பெண் 10வது முறை கர்ப்பம்… மருத்துவத்துறை அதிர்ச்சி…போலீசில் புகார்…

  • by Authour

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் கோபி ( 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (35). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

சங்கீதா அடுத்தடுத்து 9 குழந்தைகளை சுக பிரசவத்தில் வீட்டிலேயே பெற்று எடுத்து உள்ளார். இதில் ஒரு குழந்தை இறந்து விட்டது. ஒரு குழந்தையை தத்து கொடுத்து விட்டனா். மீதமுள்ள 7 குழந்தைகளை வளர்த்து வருகின்றனர். தற்போது சங்கீதா மீண்டும் கர்ப்பம் ஆனார். இது குறித்து தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள், உடல்நிலை மோசமாகி விடும். எனவே கர்ப்பத்தை கலைத்து விடும்படி கூறினர்.

இதற்காக  மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கருக்கலைப்பு செய்வதற்கான முதல்கட்ட சிகிச்சையை எடுத்து உள்ளார். இதற்கிடையே திடீரென மனம் மாறிய சங்கீதா, மீண்டும் மாத்திரையை எடுத்து கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மல்லசமுத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் பிரசாந்த் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து சங்கீதாவை போலீசார் சமரசம் செய்து, கருக்கலைப்பு செய்வதற்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அழைத்து வந்தனர்.அங்கு சங்கீதா டாக்டர்களுக்கு போதுமான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.குறிப்பாக பிரசவ வார்டுக்கு உள்ளே செல்ல மறுத்து விட்டார்.  சுகாதாரத்துறையினர்  கெஞ்சி கூத்தாடி பார்த்தனர். ஆனால் சங்கீதா  குழந்தை பெற்றெடுப்பதில்  நம்பி கட்டுற கம்பி என்ற அளவில் உறுதியாக இருந்தார்.  எனவே அவரை   கருகலைப்பு செய்யாமல் விட்டு விட்டனர்.

தற்போது சங்கீதா 2 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 9 குழந்தைகளை பெற்றெடுத்த சங்கீதா, தற்போது மீண்டும் கர்ப்பமாகி குழந்தை பெறுவதற்கு தயாராகி வருவதால்  சுகாதாரத்துறையினர் சங்கீதாவை  அதிசயமாக பார்க்கிறார்கள்.

அதிசயமே அசந்து போகும் நீ….. சுகாதாரத்துறையின் அதிசயம் என  டாக்டர்கள்  சங்கீதாவை வியந்து பார்க்கிறார்கள். ஒரு குழந்தையை கூட  சுக பிரசவத்தில் பெற்றெடுக்காமல்  சிசேரியன் செய்யும் இந்த காலத்தில்  இப்படியும் ஒரு சங்கீதாவா?  என அவரை  பாராட்டும் அதே வேளையில் மனதுக்குள்   கோபிக்கத்தான் செய்கிறார்கள்.

சங்கீதா ஏற்கனவே 9 குழந்தைகளை சுக பிரசவத்தில் வீட்டிலேயே பெற்று உள்ளார். தற்போது மீண்டும் கர்ப்பம் அடைந்து உள்ளார். அதை கலைக்க குடும்பத்தினர் மூலமாகவும்  போலீசார் மூலமாகவும் கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம். ஆனால் அவர் ஏற்க மறுத்து வருகிறார். தொடர்ந்து அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து கருவை கலைக்க முயற்சி  மேற்கொண்டு வருவதாக  மருத்துவத்துறையினர் கூறுகிறார்கள்.

தும்பை விட்டு வாலை பிடிக்கிறான் என்று ஒரு பழமொழி  உண்டு. சுகாதாரத்துறையினருக்கு இந்த பழமொழி 100 சதவீதம் பொருந்தும். குழந்தைக்கு காரணமான  கோபிக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்  செய்துவிட்டால் இந்த பிரச்னை வருமா?  அதை ஏன்  மருத்துவத்துறையினர் யோசிக்கவில்லை என்பது தெரியவில்லை. 

16ம் பெற்று  பெரு வாழ்வு வாழ்க என்ற பழமொழியை சங்கீதா தவறாக புரிந்து கொண்டு விட்டாரோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது. அவரது உறுதிப்பாட்டை பார்த்தால்  இன்னும் அவர் தனது   லட்சியத்தில் உறுதியாக இருப்பது தெரிகிறது.