Skip to content
Home » ஸ்ரீரங்கம்: மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம்: மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

  • by Authour

பூலோக  வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள்  நடந்து வந்தாலும், இங்கு நடைபெறும்  வைகுண்ட ஏகாதசி விழா  மிகவும்  பிரசித்தி பெற்றது.

கடந்த 30ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன்   வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது.  அதைத்தொடர்ந்து பகல் பத்து திருநாள்  தொடங்கி  நடந்து வந்தது. நம்பெருமாள் தினம் ஒரு சிறப்பு அலங்காரத்தில் சேவை சாதித்தார்.

பகல் பத்து திருநாளில் பத்தாம் நாளான இன்று   காலை நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம்  என்னும் மோகினி அலங்காரத்தில்  எழுந்தருளினார்.  வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே   இன்றைய நாளில் நம்பெருமாள்  பெண் வேடத்தில்  காட்சி தருவார். எனவே  மோகினி அலங்காரம் சிறப்பு வாய்ந்ததாக  பக்தர்கள்  போற்றுகின்றனர். மோகினி அலங்காரத்தில் இன்று நம்பெருமாள் வெண்ணிற பட்டு புடவை அணிந்து,   வலது திருக்கையில்

தங்கக் கோலக்கிளி தாங்கி, இடது திருக்கை தொங்க விட்டுக் கொண்டு , கம்பீரமாக அமர்ந்த திருக்கோலத்தில் –
சௌரிக் கொண்டை அணிந்து,  அதில் கலிங்கத்துராய் , நெற்றி பட்டை , முத்து பட்டை சாற்றி; காதில் வைர மாட்டல், வைரத் தோடு அணிந்து,  மூக்குத்தி அணிந்து;

திருமார்பில் பங்குனி உத்திர பதக்கம், அதன்மேல் தாயாரின் திருமாங்கல்யம், அழகிய மணவாளன் பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, தங்க பூண் பவழ மாலை, காசு மாலை அணிந்து; இடது திருக்கை முழுவதும் தங்க வளையல்கள், அரசிலை பதக்கம், பவழ வளையல், தாயத்து சரங்கள் , திருவடியில் தங்க சதங்கை, தண்டைகள்.

பின் சேவையில் ஏலக்காய் ஜடை தாண்டா சாற்றி,அதன் மேல் கல் இழைத்த ஜடை நாகத்துடன் சேர்ந்த சிகப்பு கெம்புக்கல் ஜடை அணிந்து; ராக்கொடி அணிந்து; திருக் கைகளில் புஜ கீர்த்தி சாற்றி ; அரைச்சலங்கை இடுப்பில் வளைவாக சாற்றி;
சூர்ய பதக்கம்
என ஏராளமான திருவாபரணங்கள் சாற்றி வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
நம் பெருமாள் மோகினி அலங்காரத்தில்  சேவை சாதிப்பதை  ஏராளமான பக்தர்கள் தரிசித்தனா்.  இன்ற மாலை வரை நம் பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில்  சேவை சாதிப்பார். காலை முதல்  பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.   கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

நாளை அதிகாலை  பரமபதவாசல் என்னும் சொர்க்கவாசல்  திறப்பு விழா நடக்கிறது.  இதில் தமிழகம் மட்டுமல்லாமல்  இந்தியாவின் பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு நம்   பெருமாளை சேவிப்பார்கள். இதற்காக  கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.  ஸ்ரீரங்கத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள்,  சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன.