மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஒட்டலில் தங்கி இருந்தார். இன்று அவர் பாஜக கூட்டணியை முடிவு செய்து விடுவார். அதிமுக உள்பட முக்கிய கட்சித்தலைவர்களை அமித்ஷா சந்திப்பார் என்றெல்லாம் சில நாட்களாக செய்திகள் பரப்பப்பட்டு வந்தது.
அதன்படி இன்று காலை அமித்ஷா தங்கியிருந்த ஓட்டலில் ஒரு மண்டபத்தில் என்டிஏ கூட்டணி கூட்டம் என ஆங்கிலத்தில் ஒளிரும் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. மேடையில் 7 நாற்காலிகளும், கீழே ஏராளமான நாற்காலிகளும் போடப்பட்டு இருந்தது.
ஆனால் காலையில் எந்த கூட்டமும் நடக்கவில்லை. அமித்ஷா தமிழிசை வீட்டுக்கு சென்று துக்கம் விசாரித்தார். பின்னர் மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு சென்று 2 மணி நேரம் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையில் அமித்ஷா கூட்டம் நடத்துவதாக இருந்த மேடையில் உள்ள ஒளித்திரையில் கட்சி கொடி திரையிடப்பட்டது. அதன் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு என பேனர் மாற்றப்பட்டது. அந்த பேனரில் நயினார் நாகேந்திரன் படமும் இருந்தது. எனவே நயினார் நாகேந்திரன் தான் புதிய பாஜக தலைவர் என்பது உறுதியாகி விட்டதாக கருத்து நிலவியது.
இதற்கிடையே 2 மணி நேரம் குருமூர்த்தியுடன் ஆலோசனை நடத்திய அமித்ஷா மதியம் 2 மணிக்கு கிண்டி ஓட்டலுக்கு வந்தார். அதைத்தொடர்ந்து அண்ணாமலையும், மத்திய அமைச்சர் முருகனும் பாஜக அலுவலகம் சென்று விட்டனர்.
அண்ணாமலையை பார்த்ததும் அங்கு திரண்டிருந்த அண்ணாமலையின் ஆதரவாளர்கள், அண்ணாமலையே தலைவராக நீடிக்க வேண்டும் என கோஷம் போட்டனர். அவர்களை அண்ணாமலை சமாதானப்படுத்தினார். இந்த பரபரப்புக்கு மத்தியில் 2.47 மணிக்கு நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார். தேசிய செயலாளர் தருண் சுக் மனுவை பெற்றுக்கொண்டார்.
விருப்பமனுவை தாக்கல் செய்யும்போது அண்ணாமலை, பொன்னார், எச்.ராஜா வானதி சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர். வானதி , அண்ணாமலை, பொன்னார், ராஜா , கனகசபாபதி, துரைசாமி, ஆகியோர் பரிந்துரை செய்து கையெழுத்திட்டிருந்தனர். வேறு யாரும் தலைவர் பதவிக்கு விருப்பமனு தாக்கல் செய்யவில்லை. பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு பலரும் விருப்பமனு கொடுத்தனர்.
நயினாருக்கு ஏற்கனவே கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நயினாரை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வில்லை நயினாரே போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றும், நாளைஅவர் பதவி ஏற்பார் என்றும் கூறப்படுகிறது.
விருப்பமனு தாக்கல் குறித்து நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
கட்சி தலைமையின் அறிவுரைப்படி தான் விருப்பமனு கொடுத்துள்ளேன் . 4 மணி வரை விருப்பமனு தாக்கல் செய்யலாம். இதுபற்றி மேலும் விவரம் வேண்டுமானால் பொதுச்செயலாளர் தருண் சுக், சக்கரவர்த்தி ஆகியோரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.
இந்த நிலையில் அமித்ஷாவை சந்திக்க ஜி.கே. வாசன் மட்டும் ஓட்டலுக்கு வந்தார். வாசனையும், குருமூர்த்தியையும் சந்திக்கவா அமித்ஷா டெல்லியில் இருந்து வந்தார்? டெல்லிக்கு வரவழைத்து இவர்களை சநதித்து இருக்கலாமே என்ற கேள்வியும் தொண்டர்கள் மத்தியில் எழுந்தது. மாநில தலைவர் தேர்தல் நடப்பதையொட்டியே அமித்ஷா வந்துள்ளார் என்றும், தேர்தலில் பிரச்னை எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவர் வந்துள்ளார் என்றும் பாஜகவினர் தெரிவித்தனர்.