Skip to content

மராட்டியம்: நாக்பூரில் வன்முறை, 144 தடை உத்தரவு

 முகலாய மன்னன் அவுரங்கசீப்பை எதிர்த்து மராத்தியர்கள் போராடினர். அப்போது சத்ரபதி சிவாஜியின் மகன் சத்ரபதி சம்பாஜியை கைது செய்த அவுரங்கசீப், அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவுரங்கசீப்புக்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில்தான் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசிய சமாஜ்வாடி எம்எல்ஏ அபு அசிம் ஆஸ்மி பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள அவுரங்கசீப்பின் கல்லறையை அப்புறப்படுத்த வேண்டும் என சதாரா தொகுதி பாஜ எம்பியும், சத்ரபதி சிவாஜியின் வாரிசுமான உதயன்ராஜே போஸ்லே கோரிக்கை விடுத்தார்.

இந்த விவகாரம் மகாராஷ்டிரா அரசியலில் புயலை கிளப்பத் தொடங்கி விட்டது. விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்த தொடங்கின. நேற்றும் பல இடங்களில் போராட்டம் தீவிரம் அடைந்தது. அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.

சில இடங்களில் அவுரங்கசீப்பின் படத்தை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். நாக்பூரில் அவுரங்கசீப் சமாதிக்கு எதிரான போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதில் 4 பேர் காயம் அடைந்தனர். நாக்பூரில் வன்முறையின்போது வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாக்பூரில் அமைதி காக்க மகாராஷ்டிரா முதலமைச்சர் பட்னாவிஸ் அறிவுறுத்தியுள்ளார். நிலைமையை காவல்துறையினர் கண்காணித்து வருவதாகவும், பதற்றத்தை ஏற்படுத்த முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  முதல்வர் எச்சரித்தார்.

error: Content is protected !!