Skip to content
Home » நாகூரில் நள்ளிரவு படகு தீவைத்து எரிப்பு….மர்ம நபருக்கு வலை

நாகூரில் நள்ளிரவு படகு தீவைத்து எரிப்பு….மர்ம நபருக்கு வலை

நாகை மாவட்டம் நாகூர் மேலபட்டினச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. இவர் வழக்கம்போல் மீன்பிடித்து விட்டு தனது பைபர் படகை நாகூர் வெட்டாறு கரை ஓரம் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.  வழக்கம்போல் அப்பகுதி மீனவர்கள் நள்ளிரவு மீன்பிடிக்கச் செல்ல நாகூர் படகு துறைமுக பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது செல்வமணியின் படகு திடீரென தீப்பிடித்து எரிவதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் நாகை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர் ஆனால் காற்றின் வேகத்தில்  தீ மளமளவென பரவி படகில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து வலைகளும் ஒரு பைபர் படகும் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தில், அருகில் இருந்த 40 வலைகளும், 20 பைபர் படகுகளும் அங்கிருந்த மீனவர்கள் மூலம் அப்புறப்படுத்தபட்டதால், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள படகுகள் தப்பின.

நாகூர் வெட்டாற்று கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகிற்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து, நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி படகும் அதிலிருந்த ஐந்து வலைகளும் தீ வைத்து எரிக்கப்பட்டு அவை கருகிய நிலையில் உள்ளதை கண்டு மீனவரின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நாகூர் வெட்டாறு கரையோரம் படகு நிறுத்தும் பகுதியில் போதிய மின் விளக்கு வசதி இல்லாததால், மது குடிக்க வரும் மர்ம நபர்கள் இதுபோன்ற செயலை செய்துள்ளார்கள் என குற்றச்சாட்டிள்ள நாகூர் மேலபட்டினச்சேரி கிராமத்தினர், படகு அணையும் துறைமுக பகுதியில் மது குடிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதேபோல் மீனவர்களின் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள படகுகள் வலைகள் பாதுகாப்பாக இருக்க மின்விளக்கு பொருத்த வேண்டும் என்றும் அப்பகுதி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை அடுத்த நாகூரில் வெட்டாற்று கரையோரத்தில் மீனவரின் படகு மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே நாகூரில் 5, லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரிந்த படகு மற்றும் வலைகளை பார்வையிட்ட தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் மீனவருக்கு ஆறுதல் கூறி 1, லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!