உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 467 ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.: இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை: ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு :
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா என அழைக்கப்படும் செய்யது அப்துல் காதிர் நாயகம் தர்காவின் 467 ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி தர்காவின் ஐந்து மினாராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள், நாகையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பெரிய ரதம், சின்ன ரதம், செட்டிப்பல்லக்கு மற்றும் கப்பல் ரதம், சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கொடி உள்ளிட்ட அலங்கார வாகனங்களில், மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக நாகை, நாகூரின் முக்கிய வீதிகள் வழியாக ஆண்டவர் தர்கா வந்து அடைந்தது.
ஆண்டவரின் பாடலை தாஹிரா இசையுடன் இசைத்து வந்த பக்கீர்மார்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கொடியினை வரவேற்றனர். அதனை தொடர்ந்து கொடிக்கு தூ-வா ஓதப்பட்டு வாணவேடிக்கை முழங்க நாகூர் ஆண்டவர் தர்காவிலுள்ள 5 மினாராக்களிலும் கொடியேற்றப்பட்டது. அப்போது வண்ணமயமான வாண வேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன. கந்தூரி விழாவின் கொடியேற்றம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் இந்துகள் கலந்து கொண்டு நாகூர் ஆண்டவரை பிரார்த்தனை செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 23ம் தேதி இரவு தாபூத்து என்னும் சந்தனக்கூடு ஊர்வலம் நாகையில் இருந்து புறப்பட்டு, 24 ம் தேதி அதிகாலை ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வு தர்காவில் நடக்கிறது. விழாவை காண தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகூருக்கு வருகைதந்துள்ளனர். விழாவையொட்டி நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையில் நாகை திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.