நாகப்பட்டினம் பெருமாள் சன்னதியை சேர்ந்தவர் கணேசன். இவர் கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூரில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தை அவரது மனைவியின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய அகரகடம்பனூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வியை(வயது40) அணுகினார்.அப்போது பட்டா மாறுதல் செய்ய தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் செல்வி, கணேசனிடம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசன் இது குறித்து நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை (ரூ.10 ஆயிரம்) கணேசனிடம் கொடுத்து, கிராம நிர்வாக அலுவலர் செல்வியிடம் கொடுக்குமாறு கூறினா். நேற்று மதியம் சுமார் 1.30 மணி அளவில் அகரகடம்பனூர் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்ற கணேசன் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அதிகாரி செல்வியிடம் கொடுத்தார். அவர் பணத்தை வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் செல்வியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.