நாகை மாவட்டத்தில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக மீன்பிடி தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக நாகை அக்கரைபேட்டை துறைமுகத்தை நவீனமயமாக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மீன்களை இறக்குவதற்கும், சுகாதாரமான முறையில் கையாளுவதற்கும், நாகை மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த தமிழக அரசு மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து 81 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
இதனை தொடர்ந்து இன்று நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகம் நவீனமயமாக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. துறைமுகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஜானி
டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் நவீன மீன்பிடி துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டினர். நாகை மீன்பிடி துறைமுகம், 300 மீட்டர் நீளம் படகு அணையும் தளத்துடனும், படகு பழுதுபார்க்கும் சாய்வுதளம் மற்றும் மீன் ஏலக்கூடம் ஆகியவை நவீன முறையில் கட்டப்பட உள்ளதால். அம்மாவட்ட மீனவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.