நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிப்படை வீடு என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற அருள்மிகு சுப்ரமணிய ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைப்பெறும். சித்திரைத் திருவிழாவில் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த கிராமங்களில் இருந்து வரும் ரதாக்காவடி ஆட்டம் உலகப்பிரசித்து பெற்றதாகும். இவ்வாண்டின் சித்திரைத்திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 26 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைப்பெற்றது. 36 அடி உயரமும் 13 அடி அகலமுடைய அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு தீபாரதனைக்குப் பிறகு நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ்,இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ராமு, கோயில்
செயல் அலுவலர் கவியரசு,ஒன்றிய கவுன்சிலர் செல்வம் மற்றும் பலர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்று பக்தி பரவசத்தோடு திரளான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். தேரானது ஆலயத்தை சுற்றி உள்ள 4 வீதிகளிலும் வலம் வந்து ஆலயத்தை சென்றடைந்தது. இதில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை வழிப்பட்டனர். தேரட்டோத்தை முன்னிட்டு துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.