நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலவர் கோயில் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் இந்த கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழா பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் உள்ள வேல்நெடுங்கண்ணி அம்மனிடம், முருகன் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
வேல்நெடுங்கண்ணியிடம், வேல் வாங்கும் போது முருகனின் முகம் மற்றும் திருமேனி முழுவதும் வியர்வை சிந்தும் அற்புத காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் வருவார்கள். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 13ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இரா.ராணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் முருகபெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நகரின் நான்கு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நண்பகலில் தேர்நிலையை அடைந்தது.தேரோட்டத்தை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தேரோட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், கோயில் செயல் அலுவலர் பா.முருகன், அறங்காவலர் குழு தலைவர் நாகரத்தினம் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று இரவு வேல் நெடுங்கண்ணி அம்மனிடம், சிங்காரவேலவர் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
தேரோட்டம் மற்றும் வேல் வாங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.