நாகையில் பெய்த கனமழையால் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9ம் வகுப்பு படிக்கும் கவியழகன் என்ற சிறுவன் உயிரிழந்தார்.
வங்கக்கடல் பகுதிகளில் தீவிரமடைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், நாகப்பட்டினத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செம்பியன்மகாதேவியை சேர்ந்த முருகதாஸ் என்பவரது மகன் கவியழகன். இவர் செம்பியன்மகாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம்வகுப்பு படித்து வருகிறார். முருகதாஸ் கூரை வீட்டில் மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.
நேற்றிரவு முருகதாஸ் குடும்பத்தினர் தங்களது கூரைவீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய முருகதாஸ் குடும்பத்தினரை அக்கம்பக்கத்தினர் மீட்டனர். இதில் கவியழகன் பலத்த காயமடைந்திருந்தார். அவரை ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், கவியழகன் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அசிறுவனின் தந்தை மற்றும் தங்கை ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.