தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளுக்கு இணையான ஸ்தலமாக, நாகை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவில் விளங்குகிறது. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட சிக்கல் சிங்காரவேலவர் கோவிலின் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 13 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி சிங்காரவேலவர், வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் காமராஜ் தேரினை வடம் பிடித்து இழுத்து
துவக்கி வைக்க, பக்தர்கள் நான்கு மாட வீதிகள் வழியாக கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா… என பக்தி பரவசத்துடன் தேரினை இழுத்து வந்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தின் போது சிவ வாத்தியங்கள் முழங்க பரதநாட்டிய குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
கந்தசஷ்டி விழாவையொட்டி சிக்கல் சிங்காரவேலவர் கோயிலின் முக்கிய நிகழ்ச்சியான முருகப்பெருமான் தன் தாயிடம் வேல் வாங்கியதும் திருமேனி எங்கும் வியர்வை பொழியும் அருட்காட்சி தரும் நிகழ்ச்சி இன்று இரவு சிக்கலில் நடைபெறுகிறது. இதில் கோவிலில் வீற்றிருக்கும் வேல் நெடுங்கண்ணி அன்னையிடம், முருகப்பெருமான் ‘சக்தி வேல் வாங்கி’ திருச்செந்தூரில் ‘சூரனை சம்ஹாரம்’ செய்தது குறிப்பிடத்தக்கது. கந்தசஷ்டி பெருவிழாவையொட்டி இன்று நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.