வங்க கடலில் நேற்று புயல் சின்னம் உருவானது. இதற்கு மாண்டஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாகை துறைமுகத்தில் 2ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை மீனவர்கள் இன்று மூன்றாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் நாகை அக்கரைப்பேட்டை, செருதூர் வேளாங்கண்ணி, நாகூர், உள்ளிட்ட மாவட்டம் முழுவதுமுள்ள 25 மீனவ கிராமத்தை சேர்ந்த சுமார் 70 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சுமை தூக்குவோர், ஐஸ் உடைப்போர், சிறு குறு மீன் விற்பனையாளர்கள்
என மீன்பிடி தொழிசார்ந்த ஆயிரக்கணக்கானோர் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3000 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.இன்று காலை முதல் நாகை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.