உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று கோலாலமாக நடைபெற்றது. இவ்விழாவை சிறப்பிக்கும் விதமாக, நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் பல்வேறு ஆலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாகப்பட்டினத்தில் இன்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை கொண்டாடும் விதமாக காடம்பாடி சந்தன மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தமிழ்நாடு அனைத்து பூசாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் நலவாரியம்
சார்பில் நடைபெற்ற நிகழ்வில், சிவசேனா கட்சியின் மாநில தலைவர் தங்கமுத்துகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ஆறுமுகம் மற்றும் கிராம பூசாரிகள் இதில் திரளாக கலந்து கொண்டனர். அப்போது ராமருக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராம ஜெயம் பாடிய பக்தர்கள், ராமரின் பாதத்தின் மீது பூக்களை தூவி விழுந்து வணங்கி வழிபாடு நடத்தி, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை, பக்தி மனதுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதைப்போல் நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர் கோரக்க சித்தர் கோவிலில், அகன்ற திரையில் அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அந்நிகழ்ச்சியை தெய்வீக மனதுடன் கண்டு களித்து, மகிழ்ச்சி அடைந்தனர்.