நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் கிராமத்தில் அரசு அனுமதியுடன் 75 ஏக்கர் பரப்பளவில் மண்குவாரி இயங்கி வருகிறது. இந்த மண் குவாரியில் எடுக்கப்படும் மண் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல் ஆலை விரிவாக்க பணிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று குவாரியில் இருந்து மண் எடுக்க லாரிகள் வருவதைக் கண்ட கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென குவாரியை முற்றுகையிட்டு லாரி மற்றும் பொக்லைன் இயந்திரங்களை சிறைப்பிடித்தனர்.இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் கனிம வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் குவாரி இயங்க அனுமதிக்கப்படும் எனவும் நாளை 23-ம் தேதி (சனிக்கிழமை) நாகை தாசில்தார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி தலைமையில் நடைபெறும் அமைதி பேச்சு வார்த்தையில் எடுக்கப்படும் முடிவுக்கு பின்னர் குவாரி இயங்கும் எனவும் போலீசார் கூறினர்.இதனால் முற்றுகை போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.