தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் கனமழை தொடங்கியது. நள்ளிரவு வரை மழை பெய்தது. ஆரம்பத்தில் லேசாக பொழிந்த மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக மாறியது.
தஞ்சை, வல்லம், திருவையாறு, ஒரத்தநாடு, நெய்வாசல் தென்பாதி, கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை, மஞ்சலாறு, கீழணை, மதுக்கூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் கனமழை கொட்டியது. இன்று காலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் தஞ்சை நகரில் இன்று காலையில் இருந்து பிற்பகல் 3 மணி வரை மழை இல்லாவிட்டாலும் எந்த நேரத்திலும் மழை கொட்டும் என்ற நிலையே காணப்பட்டது.
பலத்த காற்றுடன் பெய்த மழையால் தஞ்சை சீனிவாசபுரம் ராஜராஜசோழன் நகரில் உதிய மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், பேரளம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டியது. இன்று காலையில் இருந்து மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி உள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 1 வாரமாகவே விட்டு விட்டு மழை பெய்து வந்தது. தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நேற்றில் இருந்து கனமழை கொட்டி வருகிறது. இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று மாலை வரை தொடர்ந்து இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. இடையில் சிறிது நேரம் மட்டுமே வெறித்த மழை மீண்டும் பெய்ய தொடங்கின. பகல் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில், கொள்ளிடம், திருமுல்லைவாசல் உள்பட மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கனமழை கொட்டியது.
வேதாரண்யத்தில் கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வெயில் அடிக்கும்போது தான் உப்பு உற்பத்தி தொடங்கும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் மீனவர்களும் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. தங்களது படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்யும் மழை சம்பா சாகுபடி உகந்ததாக இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேலும் ஏரி, குளம், குட்டைகளும் வேகமாக நிரம்பி வருவதால் நிலத்தடி நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கனமழையால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் ஒரே நாளில் 1993 மி.மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு வருமாறு (மி.மீ) :- வேளாங்கண்ணி-135.10, வேதாரண்யம்-112.6, நாகை-111.20, கோடியக்காடு-103.2, திருப்பூண்டி-101.60, மயிலாடுதுறை-84.1, பொறையாறு-77.1, திருவாரூர்-74, சீர்காழி-73.2, நன்னிலம்-66, கொள்ளிடம்-63.8, கீழணை-58.50, மன்னார்குடி-50, மஞ்சளாறு-35.60, நெய்வாசல் தென்பாதி-32, கும்பகோணம்-31, தஞ்சாவூர்-26.30.
காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததால், பெரிய மழை பெய்தபோதும் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. அதே நேரம் இன்னும் ஒரு வாரம் இதே போல மழை நீடித்தால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை உருவாகலாம்.