வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருவதால், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் அங்கு முடுக்கி விட்டுள்ளது. இதனிடையே புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள நாகையில் முகாமிட்டுள்ள மாநில பேரிடர் மீட்பு படையினரை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று சந்தித்தார். அதனைத் தொடர்ந்து கனமழையும்போது தாழ்வான பகுதிகளில் வீடுகளில் சிக்கிக் கொள்ளும் மக்களை மீட்பதற்கு கொண்டுவரப்பட்டுள்ள ரப்பர் படகுகள், மரங்கள் முறிந்தால், அதனை வெட்டி அப்புறப்படுத்தும் ரம்பம் உள்ளிட்ட கருவிகளின் செயல்பாடுகளையும் கேட்டறிந்தார். அதன் பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையினை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டு, மழை சேதம் மற்றும் போக்குவரத்து பாதிப்பு குறித்து வருவாய் துறை அதிகாரிகளிடம் வாக்கி டாக்கியில் பேசினார்.
பின்னர் செய்தியாளரிடம் கூறிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நாகையில் பெய்த மழையினால் ஏரி குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பியுள்ளதாகவும், வடகிழக்கு பருவ மழையினால் நாகை மாவட்டத்தில் இதுவரை 440 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 154
கால்நடைகள் உயிரிழந்துள்ளது என்றும் இதுவரை கட்டுப்பாட்டு அறைக்கு 68 புகார்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் அனைத்தையும் அரசு செய்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
மேலும் மிக்ஜாம் புயலின் பாதிப்புகளை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழுவுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உசார் படுத்தப்பட்டுள்ளதாகவும், கூடுதல் மழை பெய்தாலும் மக்களை பாதுகாப்பாக முகாம்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு அதிகாரிகள் 24 மணி நேரமும் புயல் பாதுகாப்பு மையங்களை திறந்து வைத்து தயார் நிலையில் உள்ளதாகவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
இதனிடையே மாவட்டத்தில் மழைநீர் வடியும் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், மழை பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருவதாகவும், நாகையில் விசைப்படகு கடலில் மூழ்கிய விபத்தில்,பாதிக்கப்பட்ட மீனவருக்கு நிவாரணம் வழங்குவதற்கு மீன்வளத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரகுபதி கூறினார்.