நாகை மாவட்டம் , குத்தாலம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்.இவர் கடந்த பிப்ரவரி 19ம் தேதி குத்தாலம் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த ஓஎன்ஜிசி டேங்கர் லாரி மோதியது. இந்த விபத்தில் சிவகுமாரின் இடது காலில் டேங்கர் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவரது இடது கால் எலும்பு நொறுங்கியது. இந்த விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு நரிமணம் ONGC நிர்வாகம் எந்தவித உதவியும் செய்துதரவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து இன்று நாகை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள நரிமணம் காவேரி படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் தளபதி அறிவழகன் தலைமையில் திருமுருகன் தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன்
முன்னிலையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதற்காக ஊர்வலமாக வந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர், நரிமணம் ONGC ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ONGC நிர்வாகத்தை கண்டித்தும், குத்தாலம் சுற்றியுள்ள கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினரிடம், அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசாரும், ஓஎன்ஜிசி நிர்வாகமும் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என ONGC நிர்வாகம் உறுதி அளித்ததை தொடர்ந்து, முற்றுகை போராட்டத்தை விடுதலை சிறுத்தை கட்சியினர் விலக்கிக் கொண்டனர். நரிமணம் ஓஎன்ஜிசி ஆலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய முற்றுகை போராட்டத்தால், பெட்ரோல், டீசல் எண்ணை ஏற்றி செல்லும் பணிகள் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது.
இதில் ஒன்றிய அமைப்பாளர்கள் ஜெயராமன்,பாண்டியராஜன்,ஆசைமணி,மோகன்,ஒன்றிய துணை செயலாளர் சத்யமூர்த்தி உள்பட கிராம மக்கள் பலர் உடன் இருந்தனர்.