நாகையில் இன்று விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த காவிரி விவசாயிகள் சங்கத்தினர் 100, க்கும் மேற்பட்டோர்,டெல்டா மாவட்டத்தில் காயும் 5 லட்சம் ஏக்கர் குறுவை பயிருக்கு தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உடனடியாக தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், ஆர்ப்பாட்டத்தில், டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறுவை பயிறுக்கு காப்பீடு உடனடியாக செய்ய வலியுறுத்தியும், கடைமடை பகுதியில் காய்ந்து கருகும் பயிர்களை காப்பாற்ற மத்திய அரசு, கர்நாடகா அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
மேட்டூர் அணையிலிருந்து தமிழக அரசு திறந்த தண்ணீரை நம்பி, இவ்வாண்டு தஞ்சை திருவாரூர் நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தற்போது தண்ணீர் இன்றி
கவலையடைதுள்ளதாகவும், மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் 15 தினங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற சூழல் உள்ளதால், கடைமடை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறுவை சாகுபடி கேள்விக்குறியாகி தண்ணீர் இன்றி பயிர்கள் காய்ந்து கருகிவிடுமே என்ற அச்சத்தில் அனைத்து விவசாயிகளும் உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே டெல்டா மாவட்ட விவசாயிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு, கர்நாடகா அரசுக்கு அழுத்தம் தெரிவித்து, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக கூட்டி தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் இதற்கு கர்நாடக அரசு செவிசாய்க்கவில்லை என்றால், தமிழக அரசு நீதிமன்றத்தை நாட வேண்டுமென,நாகை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.