நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த அருணா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த கந்தவேல், பாஸ்கர், அஜய்,குமரவேல், வையாபுரி, ஆறுமுகம், ரத்தினசாமி உள்ளிட்ட 13 மீனவர்கள் நேற்று இரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் இன்று அதிகாலை நாகைக்கு நேர் கிழக்கே 7, நாட்டிக்கல் மைல் தொலைவில் வலைகளை கடலில் விரிப்பதற்காக, வேகமாக சென்று கொண்டிருந்தபோது, படகின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ரத்தினசாமி என்ற மீனவர் திடீரென கடலில் தவறி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள், அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கடல் நீரோட்டத்தின் காரணமாக, மீனவர் கடலில் மூழ்கி மாயமானார். மீனவர் தவறி விழுந்து
மாயமானது குறித்து படகு உரிமையாளருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, மாயமான மீனவரை தேடும்பணியில் பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற மீனவர்கள், அங்கு தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார், மீன்வளத்துறை இந்திய கடலோர காவல் படையினர் கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் விசைப்படகில் இருந்து தவறி விழுந்து கடலில் மூழ்கி மாயமான சம்பவம் கீச்சாங்குப்பம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.