நாகை மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு; சாலையே தெரியாத அளவிற்கு 8 மணியைக் கடந்தும் பனிப்போர்வை போர்த்தியது போன்று நிலவும் சூழலால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு கார்த்திகை மாத இறுதியிலேயே பனி பெய்ய தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக பனிப்பொழிவின் அளவு அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இன்று வழக்கத்தை விட அதிக அளவு பனிப்பொழிவுடன், மூடுபனியும் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானாா்கள்.
இதுபோல திருச்சி மாவட்டம் முசிறி, அய்யம்பாளையம், தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளிலும் காலை 8 மணி வரை கடுமையான மூடுபனி காணப்பட்டது. சாலைகள் அனைத்தும் பனி போர்வை போர்த்தியது போன்று காட்சி அளித்தது. அதிக அளவு மூடுபனி காரணமாக சாலையே தெரியாத அளவிற்கு பனி மூடியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடியே சென்றனர். இந்தப் பனிப்பொழிவு காரணமாக சளி காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதோடு மட்டுமின்றி பயிர்களை பூச்சி தாக்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.