நாகை மாவட்டத்தில் கனமழையால் வயலில் மூழ்கிய சம்பா, தாளடி பயிர்களின் பாதிப்புகள், மழை நீரால் சூழப்பட்ட சுனாமி குடியிருப்புகள் மற்றும் முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிருந்தார். அதனை தொடர்ந்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை பாதிப்புகள் குறித்தான கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வருவாய்த்துறை, காவல்துறை,தீயணைப்பு துறை, பொதுப்பணித்துறை, வேளாண்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ரகுபதி, தொடர் மழையினால் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் உதவிட வேண்டுமென அவர் உத்தரவிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நாகை மாவட்டத்தில் பெய்த கனமழையினால் 15166.11 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழைவெள்ள நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதாகவும், மேலும் தொடர் மழையினால் 51 கூரை வீடுகள் பகுதி சேதம் அடைந்ததாகவும், இரண்டு முழுமையான வீடுகளும், எட்டு ஓட்டு வீடுகள் பகுதி சேதம் அடைந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் 4, பசுமாடுகள் 6,கன்றுகள் 9 ஆடுகள் என மொத்தம் 20 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக கூறினார்.
சேதமடைந்த வீடுகள் மற்றும் உயிரிழந்த கால்நடைகளின் பயனாளிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். தொடர்ந்து கூடுதலான மழை பொலிவு ஏற்பட்டு பயிர் பாதிப்பு உண்டானால், அதற்குரிய கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.