வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து இன்று நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தலைமையில், ரயில் நிலையத்திற்கு ஊர்வலமாக வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு ரயில் தண்டவாளத்தில் சென்றனர். பின்னர் திருவாரூரில் இருந்து நாகைக்கு வந்த காரைக்கால் விரைவு ரயிலை மறித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், GST வரி விதிப்பு, வேலையின்மை, மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வைத்ததை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாகை மாலி உள்ளிட்ட 500, க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம் காரணமாக எர்ணாகுளம் விரைவு ரயில் நாகையிலிருந்து காரைக்காலுக்கு 20 நிமிடங்கள் தாமதமாக சென்றது.