கடல் வளத்தின் காவலன் என்று அழைக்கப்படும் 250 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழக்கூடிய ஆலிவ் ரெட்லி அரியவகை ஆமைகளின் இனப்பெருக்கம் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெறுகிறது. காலநிலை சூழ்நிலைக்கு ஏற்ப நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடியக்கரை முதல் கொள்ளிடம் வரை 182 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரை பகுதிக்கு வரும் ஆமை இனங்கள் அங்குள்ள மணல் குன்றுகளில் முட்டையிட்டு செல்கின்றன. இந்நிலையில் முட்டைகளை சேகரித்து வரும் நாகை, மயிலாடுதுறை மாவட்ட வனச்சரக அலுவலர்கள் சீர்காழி, நாகை, கோடியக்கரை பகுதிகளில் குஞ்சு பொரிப்பகம் அமைத்து முட்டைகளை 45 நாட்கள்
முதல் 60 நாட்கள் வரை பாதுகாத்து ஆமைக் குஞ்சுகளை கடலில் விடுகின்றனர். இதைப்போல் நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டை கடற்கரையில் ஆமை குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் 5,ஆயிரம் ஆலிவ் ரெட்லி அரிய வகை ஆமைக் குஞ்சுகளை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்,வன உயிரின காப்பாளர் லோகேஷ்குமார் மீனா ஆகியோர் கடலில் விட்டனர். அப்போது பிறந்த குஞ்சுகள் தாய்வீடு திரும்பும் உற்சாகத்துடன் கடலில் நீந்தி சென்றன. இதற்காக எதிர் திசையில் காத்திருக்கும் முட்டையிட்ட தாய் ஆமைகள் கடல் திரும்பும் குஞ்சுகளை அரவணைத்து ஆழ்கடலுக்கு அழைத்து செல்வதும் சுவாரஷ்மான தகவலும்கூட. நாகை மாவட்டம் முழுவதும் இவ்வாண்டு 40, ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு இதுவரை 28000 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளதாகவும், இரு நூற்றாண்டுகளுக்கு மேல் உயிர்வாழும் அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமைகுஞ்சுகள் மீனவர்களின் காவல் தெய்வமாக விளங்குவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.