அடாவடி கந்துவட்டியில் ஈடுபட்ட அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலையில் டீசலை ஊற்றி விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் தென்ஓடாச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜகுமார். இவர், நாகப்பட்டினம் ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள உதவி இயக்குனர் ஊராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் மாரியப்பன் என்பவரிடம் 2017 ஆம் ஆண்டு 1,லட்சம் ரூபாய் விவசாயத்திற்காக வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை 2020 ஆம் ஆண்டு திருப்பி கொடுத்ததாகவும், ஆனால்
அரசு ஊழியரான மாரியப்பன் தனது அசல் பத்திரத்தை திருப்பி கொடுக்காமல் அடாவடி கந்துவட்டியில் ஈடுபடுவதாக கூறி, இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த விவசாய ராஜ்குமார், திடீரென தான் கொண்டு வந்த கேனிலிருந்து டீசலை தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் விவசாயி ராஜகுமாரின் கையில் இருந்த டீசல் கேனை கைப்பற்றி அவரை விசாரணைக்காக அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
அப்போது போலீசாரிடம் கூறிய ராஜ்குமார், தான் பெற்ற கடனை திருப்பி செலுத்தி உள்ளதாகவும் ஆனால் அடாவடி கூடுதல் வட்டி கேட்டு அரசு ஊழியர் தன்னை கொலை மிரட்டல் விடுவதாகவும் தெரிவித்த அவர், தன்னுடைய அசல் பத்திரத்தை போலீசார் மீட்டு தர வேண்டுமென கையில் கொண்டு வந்த புகார் மனுவினை போலீசாரிடம் விவசாயி வழங்கினார்.