நாகை, நாடார் தெருவில் வசித்து வருபவர் கணேஷ்குமார். இவருக்கு சொந்தமான செல்போன் கடை நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகே உள்ளது. வழக்கம்போல் நேற்றிரவு 10,மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற இவர் இன்று காலை கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சடைந்தார். பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, ஷோகேஸில் அடுக்கி வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த 15, செல்போன்கள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து கணேஷ்குமார் அளித்த புகார் பேரில் அங்கு வந்த வெளிப்பாளையம் போலீசார் கைரேகை நிபுணர்களை கொண்டு சோதனை நடத்தினர். மேலும் அப்பகுதி கடைகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து திருடர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகையில் காவல் நிலையம் அருகே உள்ள செல்போன் கடையின் ஷட்டரை உடைத்து 15 செல்போன்களை திருடி சென்றுள்ள சம்பவம் அப்பகுதி பொது மக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
