இந்திய இலங்கை இடையே தொடங்க உள்ள பயணிகள் படகு போக்குவரத்து சேவை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூலை 21ஆம் தேதி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் டெல்லியில் கையெழுத்தானது. இந்தியா, இலங்கை இடையே துவங்க உள்ள கடல் வழி பயணிகள் படகு போக்குவரத்து வழித்தடத்தினை நாகை துறைமுகத்தில் இன்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். நாகையில் இருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு சுற்றுலா பயணிகள் தங்கு தடை இன்றி செல்வதற்கு ஏதுவாக துறைமுகம் ஆளப்படுத்தும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் எ.வ. வேலு, சுங்கத்துறையினரின் அதிவேக படகில் சென்று கடல் வழித்தடத்தில் அலைகளின் வேகம் மற்றும் சீற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறிய தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நாகையில் இருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் படகு போக்குவரத்து துவங்கப்பட்டால், தொப்புள் கொடி உறவான இலங்கை வாழ் தமிழர்களின் கல்வி, மருத்துவம் மேம்பட, இந்திய -இலங்கை பயணிகள் படகு சேவை
பாலமாக அமையும் என்றும், தமிழர்களின் கலாச்சாரத்தை சர்வதேச சுற்றுலா பயணிகள் அறிந்திடும் வகையில் நாகை துறைமுகத்தின் கட்டமைப்பு பணிகள் மேம்படுத்தப்படும் என்றார்.
மேலும் நாகையிலிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு கடல் வழி பயணிகள் படகு போக்குவரத்து துவங்கினால் இந்திய இலங்கை வர்த்தகம் வளர்ச்சி அடைவதுடன், சுங்கத்துறை, இமிகிரேஷன், கப்பல் போக்குவரத்து கழகம் மற்றும் தமிழக அரசு இணைந்து நாகை காங்கேஷன் பயணிகள் படகு சேவை பணிகளை இணைந்து மேற்கொண்டு வருகிறோம் என்றார். நாகை துறைமுகம் ஆழம் படுத்தும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, இலங்கைக்கு சுற்றுலா செல்லும் 150 பேர் பயணிக்க கூடிய கடல் வழி படகு போக்குவரத்து பயண சேவை மத்திய அரசின் அனுமதியோடு அக்டோபர் மாதம் துவங்கும் எனக்கூறினார்.