நாகையில் விழிப்புணர்வு பேரணி ஒன்றில் கல்லூரி மாணவிகளோடு பங்கேற்ற துப்புரவு பணியாளர்களை குப்பைகளோடு குப்பை வண்டியில் ஏற்றிச்சென்ற அவலம்
நாகப்பட்டினம் நகராட்சி சார்பாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நாகையில் நடைபெற்றது. பேரணியில் கல்லூரி மாணவிகள், துப்புரவு பணியாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாகை சிஎஸ்ஐ திடலில் இருந்து துவங்கிய பேரணி நாகை அவுரி திடலில் நிறைவடைந்தது. பேரணி முடிந்ததை தொடர்ந்து கல்லூரி மாணவிகள் , அதிகாரிகள் பேருந்து ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வீட்டிற்கு
சென்ற நிலையில் பேரணியில் பங்கேற்க அழைத்து வரப்பட்ட துப்புரவு பணியாளர்களை குப்பை ஏற்றிவந்த அதே வாகனத்தில் ஏற்றி நகராட்சி அதிகாரிகள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணிக்கு துப்புரவு பணியாளர்களை பயன்படுத்திய அரசு அதிகாரிகள் அவர்கள் திரும்ப செல்வதற்கு வாகன ஏற்பாடுகள் செய்யாத காரணத்தால் நாகை நாகூர் ஆகிய பகுதிகளுக்கு 2 குப்பை வண்டிகளில் துப்புரவு பணியாளர்கள் சென்றனர். குப்பை வண்டி முழுவதும் குப்பைகள் நிறைந்து கிடந்ததால் பொறுக்கமுடியாத நாற்றத்தில் மூக்கை மூடிக்கொண்டு துப்புரவு பணியாளர்கள் பயணித்த அவலநிலைக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.