விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் 32 அடி உயர அத்தி விநாயகர் ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரசித்திபெற்ற நீலாதாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட விநாயகர் ஊர்வலத்தில், இந்திவிலேயே 32 அடி உயர அத்தி மரத்தில் உருவாக்கப்பட்ட விநாயகரின் பிரம்மாண்ட சிலை ஊர்வலமும்,அதனை தொடர்ந்து 12 க்கும் மேற்பட்ட வண்ணமயமான மின் அலங்கார விநாயகர் சிலைகளும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தன. அப்போது இசைக்கலைஞர்களின் தப்ஸ் செண்டை மேளம் முழக்கத்திற்கு நடன கலைஞர்கள் தப்பாட்டம், மான் ஆட்டம், மயிலாட்டம் ஆடி பக்தர்களை பரவசப்படுத்தினர்.
ஆட்டம்பாட்டத்துடன் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் ஆடிப்பாடி விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடினர். விநாயகர் ஊர்வலத்தில், வழிநெடுகிலும் நின்றிருந்த மக்கள் பிரமாண்டமான அத்திவிநாயகர் சிலைக்கு பூஜை செய்தும் விநாயகருக்கு பிடித்த பலகாரங்களை படையலிட்டும் வேண்டிக்கொண்டனர். நாகையிலிருந்து நாகூர்வரை 7 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக எடுத்து செல்லும் விநாயகர் சிலையினை பக்தர்கள் அதிகாலை நாகூர் கடலில் கரைக்கின்றனர். இதற்காக நாகை மற்றும் நாகூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.