நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட கப்பல் போக்குவரத்து சேவை சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பருவ நிலை மாற்றம் காரணமாக நவம்பர் 18ம் தேதி முதல் பயணிகள் கப்பல் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் ஜனவரி 2ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
நாகையில் இருந்து இலங்கை சென்றுவர 9,200 ரூபாய் என்று இருந்ததை தற்போது 8,500 ரூபாயாக விலை அதிரடியாக குறைத்துள்ளனர். அதோடு 10 கிலோ எடை வரை கட்டணம் இல்லாமல் எடுத்து செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் கப்பல் போக்குவரத்து சேவைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் முயற்சியால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கப்பல் சேவை ஜனவரியில் தொடங்கும் போது வாரத்தில் புதன் கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இயக்கப்படும் என்றும் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.