புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டு தமிழக பகுதியான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாரய விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் திட்டச்சேரி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட நாட்டார் மங்கலம் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கடத்தி வரப்பட்ட 200
வெளிமாநில் மதுபாட்டில்கள், 450 லிட்டர் கள்ளச்சாரய மூட்டைகளை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுப்பட்ட கவி, சுசிந்திரன், குணா, பாலசுப்ரமணியன், சரத்குமார், வெள்ளைமுத்துசெல்வம் ஆகிய 5 வாலிபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 5 இருச்சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் மற்றும் இருச்சக்கர வாகனங்களை பார்வையிட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இது போன்ற தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுப்படுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.