நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள தாணிக்கோட்டகத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். சுகர் நோயாளி இவர் கடந்த 20 ஆம் தேதி நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்ப வேண்டிய அவர் அதிகாலை இயற்கை உபாதையை கழிக்க மருத்துவமனையில் உள்ள டாய்லெட் கதவை திறந்துள்ளார். டாய்லெட்டின் தரை தள பகுதி முற்றிலும் உடைந்திருந்த நிலையில் அதனை அறியாத நோயாளி இருட்டில் கால் வைக்க, திடீரென 20 அடி ஆழத்தில் தரைதளத்தில் தவறி விழுந்துள்ளார். கீழ்தளத்தில் கழிவுநீர் தேங்கிய தொட்டியில் தவறி விழுந்த நோயாளியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை அங்கிருந்து மீட்டனர். பின்னர் உயிருக்கு போராடிய நோயாளி தர்மலிங்கத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த விபத்தில் இரண்டு விலா எலும்புகளும் நொறுங்கிய நோயாளியின் மண்ணீரல் மருத்துவர்களால் அகற்றப்பட்டது.
இதனிடையே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அலட்சிய போக்கை கண்டித்து, இன்று நாகையில் பாஜகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், பழுதடைந்த டாய்லெட் கதவை பூட்டாமல் திறந்து வைத்த மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவமனையை பராமரிக்க தவறிய மருத்துவ கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். பாஜகவினரின் சாலை மறியல் போராட்டதால் நாகை நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்து அங்கு வந்த டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக வினரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சமூக தீர்வு எட்டப்படாததால், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நாகையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்ப வேண்டிய நோயாளி, மருத்துவமனையின் அலட்சியப்போக்கால், திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த சம்பவத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், அதிரடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.