நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1551 வாக்குச்சாவடிகளும் இன்று காலை 7:00 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
அதன்படி நாகை மாவட்டம் வாழ்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நேதாஸ் சுபாஷ் சந்திரபோஸ் படையில் பணியாற்றிய தியாகி கணபதியின் மனைவியான 101 வயதான காமாட்சி என்பவர் இன்று ஜனநாயக கடமையாற்ற புதுச்சேரியில் இருந்து நாகைக்கு வருகை தந்தார்.
பின்னர் அகர கொந்தகை நடுநிலைப் பள்ளி வாக்கு சாவடிக்கு நடை தளர்ந்து வந்த மூதாட்டி காமாட்சி, அங்கு
விரலில் மை வைத்து தனது வாக்கினை பதிவு செய்தார். புதுச்சேரியில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரம் பயணித்து 101 வயதிலும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவினை பதிவு செய்ய வந்த மூதாட்டியை கண்ட வாழ்மங்களம் கிராமத்தினர் அவரை வரவேற்று ஆறத் தழுவி வியப்புடன் பார்த்தனர்.
இது நாள் வரை நடைபெற்ற தேர்தலில் தாம் வாக்களிக்க மறந்ததில்லை என கூறிய தியாகின் மனைவி மூதாட்டி காமாட்சி அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தள்ளாத வயதிலும் கடமையாற்ற வருகை தந்த 101 வயது மூதாட்டியை பார்த்தது ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறியுள்ள, முதல் தலைமுறை பெண் வாக்காளர் ஒருவர், அவரைப் பார்த்து 100% ஓட்டு பதிவினை வாக்காளர்கள் அனைவரும் பதிவு செய்து, ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.