நடிகர் நாக சைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் தங்கள் பிரிவை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அதன்பிறகு நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. ஆந்திராவைச் சேர்ந்த சோபிதா துலிபாலா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘வானதி’ கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றவர்.
இந்நிலையில், நீண்ட நாட்களாக காதலித்து வந்த நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவுக்கு இன்று காலை 9.42 மணி அளவில் ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “என் மகன் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். அவரை எங்கள் குடும்பத்துக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தம்பதிகளுக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.