தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் சிறிய அளவில் மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்கி வெள்ள காராக காட்சி அளிக்கும் நிலை உள்ளது. ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என புகார்கள் எழுந்தது. இதனையடுத்து அமமாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, ஹைதராபாத் நகரில் மழை காலத்தில் தண்ணீர் தேங்காத வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என முடிவெடுத்தனர். இதற்காக ஐ.பி.எஸ் அதிகாரி ரங்கநாதன் தலைமையிலான ஹைட்ரா(HYDRA) என்கிற குழுவும் அமைக்கப்பட்டது.
இந்த அமைப்பு 2 வாரங்களுக்கும் மேலாக ஹைதராபாத் நகரில் பல்வேறு இடங்களில் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை அகற்றி வருகின்றனர். அந்த வகையில் ஹைதராபாத் மாதப்பூரில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக திரைப்பட நடிகர் நாகார்ஜுனாவின் மண்டபத்தை இடித்து தரைமட்டமாக்கினர்.
நடிகர் நாகார்ஜுனாவின் ‘என் கன்வென்ஷன்’ என்கிற திருமண மண்டபம் 3.30 ஏக்கர் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை ஹைட்ரோ அமைப்பினர் கன்வென்ஷன் கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கினர். நீர் பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் எந்த இடமாக இருந்தாலும், அரசியல்வாதிகள் , பிரபலங்கள் என யாருக்குச் சொந்தமானதாக இருந்தாலும் இடிக்கப்படும் என்றும், அந்த இடங்கள் மீட்கப்பட்டு மீண்டும் நீர்நிலைகளாக மாற்றப்படும் என்று ஹைட்ரா அமைப்பின் தலைவர் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.