நாகை பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சேமிப்பு மையத்தில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு நாகை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
அங்கிருந்து சரக்கு ரயிலின் வேகன்களில் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு ஈரோடு, அரியலூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, ராஜபாளையம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல நாகை ரெயில் நிலையத்துக்கு நெல் மூட்டைகளை ஏற்றுவதற்காக சரக்கு ரெயில் ஒன்று 42 பெட்டிகளுடன்
வந்தது. லாரியில் வரும் நெல் மூட்டைகளை ஏற்றுவதற்கான நடைமேடைக்கு சரக்கு ரெயில் பின்னோக்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது கடைசியில் உள்ள ஒரு பெட்டி (வேகன்) தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டு தடுப்பு சுவரை இடித்துக் கொண்டு நின்றது. மீண்டும் அந்த ஒரு வேகனை சரக்கு ரெயில் எஞ்சினால் இழுக்க முடியவில்லை. இதையடுத்து தடம் புரண்ட அந்த ஒரு வேகனை மட்டும் துண்டித்து விட்டு மற்ற 41 வேகன்களில் நெல் மூட்டைகளை சுமைத்துக்கும் தொழிலாளர்கள் ஏற்றினர்.
இதையடுத்து 2,000 டன் சன்னராக நெல் மூட்டைகளுடன் அரவைக்காக சரக்கு ரெயில் 41 பெட்டிகளுடன் திருவள்ளூர் மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றது. நாகையில் சரக்கு ரெயில் பெட்டி தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.