தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு வரும் 30-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதேபோல் டிஜிபி சைலேந்திரபாபுவின் பதவிக்காலமும் அதே நாளில் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய தலைமைசெயலாளர் மற்றும் புதிய டிஜிபி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பான ஆலோசனைக்கூட்டம் மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தற்போது தமிழகத்தில் தலைமை செயலாளர் அந்தஸ்தில் 30 அதிகாரிகள் உள்ளனர். இவர்களில் 3 பேரை தமிழக அரசு பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அதில் பணிமூப்பு மட்டுமல்லாமல், அரசுடன் இணக்கமாக இருப்பவர்கள், புகார்கள் இன்றி பணியாற்றிய அனுபவம் உள்ளிட்டவை பரிசீலிக்கப்படும்.
அதில் ஒருவரை தமிழக முதல்வரே தலைமை செயலாளராக நியமிப்பார். அந்த வகையில் தமிழகத்தில் இருந்து நகராட்சி நிர்வாக த்துறை முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், ஆகியோரது பெயர்கள் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இதில் சிவதாஸ் மீனாவே தலைமை செயலாளராக வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சிவதாஸ் மீனா, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர், பொறியாளர், ஜப்பானில் முதுகலை ஆய்வு பட்டம் பெற்றவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செயலாளராகவும் இருந்தவர். நாகையில் கலெக்டராக பணியாற்றினார். இவர் 1989ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்தவர். பல துறைகளில் 33 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இவர் அடுத்த ஆண்டு அக்டோபரில் ஓய்வு பெறுவார்.
இதுபோல புதிய டிஜிபி தேர்வுக்கு தகுதியாக 10க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் இருந்தாலும், சஞ்சய் அரோரா( டில்லி போலீஸ் கமிஷனர்), சங்கர் ஜிவால்(சென்னை போலீஸ் கமிஷனர்), போலீஸ் வீட்டுவசதிகழக நிர்வாக இயக்குனர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகிய 3 பேர் பெயர்கள் தான் லிஸ்ட்டில் இருந்ததாக தெரிகிறது.
இவர்களில் சங்கர் ஜிவாலுக்கு தான் புதிய டிஜிபி வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
சங்கர் ஜிவால் 1990-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இன்ஜினீயரிங் படித்தவர். தமிழ், ஆங்கிலம் மற்றும் உத்தரகாண்டின் தாய்மொழியான குமானி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவான என்.சி.பி, திருச்சி போலீஸ் கமிஷனர், உளவுப்பிரிவில் டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜி, சிறப்பு அதிரடிப்படை ஏ.டி.ஜி.பி ஆகிய முக்கியப்பதவிகளில் சங்கர் ஜிவால் பணியாற்றியவர். அயல்பணியாக மத்திய அரசில் 8 ஆண்டுகள் பணிபுரிந்தார். பிறகு தமிழக அதிரடிப்படை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார். இரு முறை ஜனாதிபதி பதக்கம் பெற்றியிருக்கிறார்.