Skip to content

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 லாக்கரை தூக்கிய மர்ம நபர்கள்… 12பவுன் நகை திருட்டு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மருங்கப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் தேவசேனன் (வயது 66) இவரது மகன் அஸ்வின் சண்முகப்பிரியன் லண்டனில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார். மருமகள் அஸ்வினி கடலூரில் தங்கி இருந்து மருத்துவ மேற்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், தேவசேனன் அவரது மனைவி பூங்கோதை இருவரும், வீட்டைப் பூட்டி விட்டு கடந்த 22 ஆம் தேதி மருமகளைப் பார்ப்பதற்காக கடலூர் சென்று இருந்தனர்.

ஜோதி என்பவர் இரவு நேரங்களில் மின் விளக்கை ஒளிர வைப்பது, பகலில் மின் விளக்கை அணைத்துவிட்டு செல்வது என வீட்டை மேற்பார்வை பார்த்து வந்தார். இந்நிலையில் இவரது வீடு பூட்டப்பட்டு இருப்பதை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, இரண்டு லாக்கரையும் தூக்கிச் சென்று, வீட்டின் கொல்லைப்புற வழியாக சரக்கு வேனில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.

24 ஆம் தேதி காலையில் வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு ஜோதி அதிர்ச்சி அடைந்து தேவசேனனுக்கு தகவல் தெரிவித்தார். தேவசேனனின் தகவலின் பேரில் அவரது உறவினரான இ.வீ.காந்தி வீட்டில் வந்து பார்த்தபோது, லாக்கர் திருடப்பட்டிருப்பதும், வீட்டில் பீரோக்களில் இருந்த பொருட்கள் கலைந்து கிடந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து இ.வீ.காந்தி சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, கடலூரில் இருந்து ஊர் திரும்பிய தேவசேனன், “லாக்கரில் இருந்த வெள்ளிச்செம்பு, வெள்ளி குத்துவிளக்கு, தட்டு, டம்ளர் உள்ளிட்ட 12 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்களும், தங்கத்தோடு, தங்க வளையல், ஆரம், செயின் என 12 பவுன் எடையுள்ள தங்க நகைகளும் திருட்டுப் போனதாக” காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தஞ்சையில் இருந்து வந்த தடய அறிவியல் துறை ஆய்வாளர் மோகன்தாஸ் கைரேகை, தடயங்களை பதிவு செய்தார். மேலும் மோப்பநாய் லியோ கொண்டு வரப்பட்டு சோதனைக்கு விடப்பட்டது.

மருங்கப்பள்ளம் மற்றும் நாடியம் பகுதியில் கடந்த 2 வருடங்களுக்குள், 6 ஆவது தடவையாக தொடர்ந்து வீடுகளை உடைத்து திருடி வருவது அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நடந்த கொள்ளை சம்பவத்தில் ஒவ்வொன்றும் சுமார் 250 கிலோ எடையுள்ள பெட்டகத்தை, வீட்டின் பின்புறம் தோப்பு வழியாக சுமார் 80 அடி தூரம் இழுத்துச் சென்று, முள்வேலியை வெட்டி வழி ஏற்படுத்தி கொள்ளையர்கள் தாங்கள் கொண்டு வந்த வாகனத்தில் ஏற்றிச் சென்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனிமேலும், இது தொடராமலிருக்க காவல்துறை தனிப்படை அமைத்து கொள்ளையர்களைப் பிடித்தால் மட்டுமே மக்கள் அச்சமின்றி வாழ முடியும் என்ற நிலை உள்ளது.

தேவேந்திரன், மறைந்த திமுக பிரமுகரான மாநில விவசாய அணி அமைப்பாளர் பொன்.பாலசுப்பிரமணியன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!