Skip to content
Home » அமெரிக்காவில் பறந்த இன்னொரு மர்ம பொருள்…. ராணுவம் சுட்டு வீழ்த்தியது

அமெரிக்காவில் பறந்த இன்னொரு மர்ம பொருள்…. ராணுவம் சுட்டு வீழ்த்தியது

அமெரிக்காவின் மவுண்டானா மாகாணம் கஸ்ஹடி நகரில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்தின் வான்பரப்பில் பல ஆயிரம் அடி உயரத்தில் கடந்த ஜனவரி 30-ம் தேதி வெள்ளை நிறத்திலான மிகப்பெரிய மர்ம பலூன் பறந்தது. இந்த பலூன் சீன உளவு பலூன் என்பது தெரியவந்தது. அணு ஆயுத ஏவுதளத்தின் ரகசிய தகவல்களை சேகரிக்க சீனா இந்த ரகசிய உளவு பலூனை அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. வர்த்தக ரீதியிலான விமானங்கள் பறக்கும் உயரத்திற்கு அதிகமான உயரத்தில் அந்த உளவு பலூன் பறந்த நிலையில் அமெரிக்க பாதுகாப்பிற்கு இந்த பலூன் அச்சுறுத்தலாக விளங்கியது.

இதனை தொடர்ந்து சீன உளவு பலூனை கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க போர் விமானங்கள் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தின. சுட்டு வீழ்த்தப்பட்ட உளவு பலூன் அட்லாண்டிக் கடலில் விழுந்தது. அட்லாண்டிக் கடலில் விழுந்த அந்த பலூனின் பாகங்களை கைப்பற்றிய அமெரிக்கா பலூன் குறித்து ஆய்வு செய்து வருகிறது. வானிலை ஆய்வுக்காக அந்த பலூன் அனுப்பட்டதாக சீனா கூறிய நிலையில் இந்த விவகாரத்தில் அமெரிக்கா – சீனா இடையே மோதல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், சீன உளவு பலூனை தொடர்ந்து 2-வது சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் வான்பரப்பில் மர்ம பொருள் ஒன்று பறந்துகொண்டிருந்தது. வானில் 40 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு சிறிய காரின் அளவிலான அந்த மர்ம பொருள் பறந்துகொண்டிருந்தது. இந்த மர்ம பொருள் கண்காணிப்பு ரேடாரில் தென்பட்ட நிலையில் அமெரிக்க வான்பரப்பு உஷார்படுத்தப்பட்டது. அந்த மர்ம பொருள் விமானங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்ற அச்சுறுத்தல் இருந்ததையடுத்து அதை சுட்டு வீழ்த்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.

அதிபரின் உத்தரவையடுத்து போர் விமானங்கள் இன்று அந்த மர்ம பொருளை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தின. மர்ம பொருளின் சிதைந்த பாகங்கள் அலாஸ்காவின் உறைந்த ஆற்றுப்படுகையில் விழுந்துள்ளது. அந்த மர்ம பொருளின் பாகங்களை கண்டுபிடித்து அது எங்கிருந்து வந்தது. மர்ம பொருளை யார் அனுப்பியது, அதன் நோக்கம் என்ன?  என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்கா விசாரணை நடத்தி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!