தஞ்சாவூர் விளார் ரோடு சண்முகநாதன் நகர் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் பாலமுருகன் 37. இவர் காயிதே மில்லத் நகர் 13வது தெருவில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் சூப்பர் மார்க்கெட் ஒன்றும் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி இரவு வழக்கம் போல் பாலமுருகன் தனது செல்போன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
மறுநாள் 24 ஆம் தேதி கடையை திறக்க வந்த பாலமுருகன் அதிர்ச்சி அடைந்தார். அவரது கடை போட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடன் உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைத்திருந்த ரூ. 84,000 ரொக்கம் மற்றும் ரூ. 7 ஆயிரம் மதிப்பு செல்போன் உதிரி பாகங்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் இவரது கடைக்கு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு பாலமுருகன் தகவல் தெரிவித்தார். மேலும் சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகையில் பதிவு செய்யப்பட்டன. போலீஸ் மோப்பநாயும் அழைத்து வரப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. பாலமுருகன் கடைக்கு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இருந்து ரூ.23 ஆயிரம் ரொக்கமும் திருடப்பட்டது தெரியவந்தது..இரு கடைகளிலும் இருந்து ரொக்கம் ரூ. 1 லட்சத்து 7 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.
இதையடுத்து பாலமுருகன் தாலுகா போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.