மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கருப்பண்ணசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் மற்றும் உட்பிரகாரத்தில் உள்ள அரசடி விநாயகர், பாலமுருகன், ஸ்ரீ ஏழைக்காத்தம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில்கள் கும்பாபிஷேகம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. கடந்த 15 ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் யாகசாலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்கியது.
தொடர்ந்து இரண்டாம் கால யாகசாலை பூஜை இன்று நிறைவுற்று பூர்ணஹூதி செய்து மகா தீபாராதனை நடந்தது.மேள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடாகி கோவிலை சுற்றி கோபுர கலசங்களை வந்தடைந்தது.
பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுரகலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கையில் வீச்சரிவாளுடன் 25 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமாக எழுந்தருளியுள்ள கருப்பண்ணசாமி சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் கோவிலில் பக்தர்கள் இருவர் சுவாமி வந்து ஆடி அரிவாள் மீது ஏறி நின்றது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.