மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சித்தன்காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரது மகன் கல்யாணசுந்தரம் என்கிற வைரவேல்(35). திருவெண்காடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி 10-ம் வகுப்பு படித்துவந்த 15 வயது மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் தன்னை அடையாளம் காட்டிவிடக் கூடாது என்பதற்காக அவரை காலால் கழுத்தில் மிதித்து கொலையும் செய்துள்ளார்.
இதுகுறித்து,திருவெண்காடு போலீஸார் போக்சோ மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து கல்யாணசுந்தரத்தை கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குநடைபெற்றுவந்தது
இவ்வழக்கில் சிறுமியை கொலை செய்த கல்யாணசுந்தரத்துக்கு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் ஒரு ஆயுள் தண்டனையும், கொலை குற்றத்துக்காக ஒரு ஆயுள் தண்டனையும் என இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.4,000; அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார்.
இன்னொரு வழக்கு:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சோனி என்கிற சுரேஷ்மேனன்(27). இவர் 2020-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி 4-ம் வகுப்பு படித்துவந்த 9 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த போக்சோ வழக்கும் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இவ்ழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனையும் 2ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார்.
இரு வழக்குகளிலும் தண்டனை பெற்ற வைரவேல் மற்றும் சுரேஷ் மேனனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்
இந்த வழக்குகளில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ராம.சேயோன் ஆஜர் ஆனார்.
ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்துக்கு போக்சோ நீதிமன்றம் மாற்றப்பட்ட பின்னர் போக்சோ வழக்கில் ஒரே நாளில் பெறப்பட்ட முதல் தீர்ப்புகள் இவைஎன்பது குறிப்பிடத்தக்கது